வெற்றி



அன்று கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி. இந்தியாவின் கவுரவமே அப்போட்டியில் ஜெயிப்பதில் தான் இருப்பது போல் கோடிக்கணக்கான மனசுகளில் அன்று அளவு கடந்த பரபரப்பு. அத்தனை கண்களும் பந்துகளில் பின்னால் ஓட்டம் எடுக்க, மனதில் தடக் தடக். சிறிது நேரத்தில் தோல்வி பயம் கவ்விக்கொள்ள அந்தத் தோல்வியை எதிர்கொள்ள முடியாத பலரும், ஆட்டம் முடிவதற்கு முன்பே பார்ப்பதை நிறுத்திக் கொண்டனர். அடுத்த முறை வெற்றி அடைவோம் என்ற கண்ணீர்த்துளிகள் வாட்ஸ் அப்பில் பறந்தன.

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதற்காக நாளைக்கு யாரும் தற்கொலை முயற்சியில் இறங்கி விடக் கூடாதே என பல மனங்களில் பதைபதைப்பு...இதற்கு இடையில் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வீட்டின் முன்பு துணை ராணுவப்படை பாதுகாப்பு...ஆம் தோல்வி எப்படி வேண்டுமானாலும் தன்னை வெளிப்படுத்தும். கோபத்தின் உச்சத்தையும் எட்டும்...மரணத்திலும் தள்ளும். தோல்வியைக் கையாளப் பழகுவதும், வெற்றிக்கான அடிப்படையே என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்வின் முன் பாதியில் பல்வேறு கஷ்டங்களையும், தோல்விகளையும் பார்த்துப் பழகிய பலர், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தை அடுத்த அத்தியாயத்தில் பயன்படுத்தி சாதனையாளர்களாக உயர்ந்துள்ளனர். வெற்றி தரும் மிதப்பு சில நொடிகளில் கரைந்து விடும். ஆனால் தோல்வி மனதில் எழுதும் வலி அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடாது. தோல்வியின் வலி வாழ்வின் இறுதி வரை தொடர்ந்து வரும். ஆனால் எந்தத் தோல்வியின் நோக்கமும் உங்களைக் கொல்வது அல்ல. அது உங்களை புது மனிதனாக மாற்றிக் கொள்வதற்கான கதவுகளைத் திறந்து விடுகிறது.

தோல்வியா! வா என அழைத்து பக்கத்தில் அமர்த்திக் கொள்ளுங்கள். நீயும் என் நண்பன் தான் என தோல்விக்கும் உங்களுக்குமான புரிதலுக்கான தளத்தை திறந்து விடுங்கள். ஓகே! எல்லாம் சரியாகி விடும் என மனதிற்கு சொல்லிக்கொள்ளுங்கள். இப்போதைக்கு உங்களால் நிம்மதியாக மூச்சு விட முடியும். குறிப்பிட்ட செயலில் உங்களது பயணத்தை ரீவைண்ட் செய்து மனதில் ஓட விடுங்கள். ஒரு தாளை எடுத்து கடந்த பயணத்தில் எதெல்லாம் சிக்கலாக மாறியது அல்லது தவறுகள் என பட்டியலிடுங்கள். ஆம் தோல்வி ஒரு நல்ல ஆசிரியன். உங்களது தவறுகளை அப்பட்டமாக சொல்லும் கண்ணாடி. தோல்வி தான் உண்மையான நண்பனும் கூட.

பிரச்னைகளின் பின்னால் ஓடிய காலம், இப்போது மாறியிருக்கும். இனி நம்பிக்கை வாசல் பக்கமாக நடந்து செல்வதற்கான பயணத்தை வகுக்க வேண்டும். ஏற்கனவே பட்டியலிட்ட நாமது பலவீனங்களை பலமாக மாற்றுவது அடுத்தகட்ட வேலை. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட கவனித்து மாற்ற வேண்டும். அப்போது தான் ஆரம்பகட்ட சறுக்கல்களை தவிர்க்க முடியும். உங்களை தட்டிக் கொடுத்து உற்சாகம் சேர்க்கும் நண்பர்களின் வார்த்தைகளுக்கு செவி கொடுங்கள். உங்களை மட்டம் தட்டுபவர்கள் பக்கம் திரும்பக்கூட வேண்டாம்.

உற்சாகமாகப் பயணத்தைக் கிளப்புங்கள். ஒவ்வொரு படியிலும் வெற்றியின் ருசி உங்களுக்கு அபரிமிதமாகக் கிடைக்கும். வாழ்க்கை இவ்வளவு எளிதா என்று புரியும். இவ்வளவு நாட்களாக நாம் மலையாக நினைத்த பிரச்னைகள் எல்லாம் பனியாக மாறி காணாமல் போகிறதே என்ற வியப்பின் எல்லையில் தான் உங்களது வெற்றி காத்திருக்கிறது. அவசரம் இன்றி வெற்றியைக் கொண்டாடுங்கள். உங்களை செதுக்கி பரிமளிக்கச் செய்வதில் தோல்வியின் பங்கு அதிகம் என்பது புரிந்திருக்குமே. இனிமேல் எந்தச் சூழலிலும் தோல்வி உங்களை துவளச் செய்யாது. உறவுகளில், தேர்வில், வேலையில், தொழிலில், காதலில் இப்படி எங்கு வேண்டுமானாலும் தோல்விகள் நம்மை சந்திக்கலாம். அந்த நொடியில் இருந்து உங்களது பயணத்தை வெற்றியின் பக்கமாக திசை திருப்பிக் கொள்ள ஆயத்தமாயிருங்கள்.

தோல்வி என்பதும் வெற்றியின் வேறொரு வடிவம் என்பது புரியும்.


Comments

Popular posts from this blog

வாழ்க்கையில் வெற்றி பெற 15 படிகட்டுகள்

வாழ்க்கை ஒரு போராட்டம்

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு